இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 கவுகாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 24/2 என்ற நிலையில் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார். ருதுராஜ் ஒரு முனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் சூரியகுமார் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காமல், கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து திலக் வர்மா ருதுராஜ் இணை ஆரம்பத்தில் சற்று பொறுமையாக ஆடியது. பின்னர் தனது அதிரடி துவங்கிய ருத்ராஜ் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் ருத்ர தாண்டவம் ஆடினார். திலக் வர்மா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் முதல் டி20 சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார். மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஆவேசமாக ஆடத் தொடங்கினார். ஆவேஸ் கான், ஹெட்டை 35 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இணை ஓரளவு நிலைத்து ஆட, ஸ்டாய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். பின்னர் இணைந்த வேட், மேக்ஸ்வெல் இணை சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் பயனளிக்கவில்லை. 47 பந்துகளில் சதம் கடந்த மேக்ஸ்வெல், ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து வெற்றி தேடித் தந்தார். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வேட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
- வெ.அருண்குமார்