அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், தனது 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அவருக்கு ருசிகரமான நாளாக அமையவில்லை. ஜப்பானின் நவோமி ஒசாக்கா முதல் கிராண்ட் ஸ்காம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், தன் முதல் கேமைப் பறிகொடுத்தார் செரீனா வில்லியம்ஸ். அடுத்த கேமில் இயல்பான ஆட்டத்தை செலுத்த முனைப்பிலிருந்த அவருக்கு, பார்வையாளர் வரிசையில் இருந்த அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஏதோ சொல்ல முயன்றார். இதைப் பார்த்த களநடுவர் கார்லோஸ் ராமோஸ், செரீனாவுக்கு எச்சரிக்கை தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த செரீனா, பயிற்சியாளர் தமக்கு கட்டை விரலைக் காட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், எந்தவித உத்திகளையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது விதிமீறல் என்பதால், நடுவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இதனால், கோபமடைந்த செரீனா நீ ஒரு பொய்யர் என விமர்சித்தார். அதோடு விடாமல், அடுத்தடுத்த கேம்களிலும் செரீனா மற்றும் நடுவர் இடையே வார்த்தைப்போர் தொடர்ந்தவண்ணம் இருந்தது.
இதனால், மேலும் இரண்டு முறை எச்சரிக்கையும், ஒசாக்காவுக்கு கூடுதல் புள்ளிகளும் நடுவர் கார்லோஸ் வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த செரீனா நடுவரை நோக்கி வந்து நீ ஒரு திருடன்.. என் ஒரு புள்ளியைத் திருடிவிட்டாய் என கடுமையாக சாடினார். இதையடுத்து, போட்டி நடுவர் செரீனாவுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இருந்தாலும், அந்தப் போட்டியில் செரீனா தோற்றதும், தனது மட்டையை கீழே போட்டு உடைத்தார். கோபமாக கத்தினார்.
இந்நிலையில், செரீனாவுக்கு நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரூ.12 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு உலக டென்னிஸ் ஜாம்பவான்கள் பில்லி ஜீன் கிங், ஆண்டி ரோடிக், விக்டோரியா அஜரென்கா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செரீனாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததோடு, பெண் என்பதால் இது வெறிச்செயல் ஆகிவிட்டது. ஆணாக இருந்திருந்தால் பொறுத்திருந்திருப்பார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.