இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், இதனைத் தடுக்க பல்வேறு மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடத் துவங்கியுள்ளன. அதன்படி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "கோவிட் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்தேன். இருப்பினும், எனக்கு ஏற்பட்ட லேசான அறிகுறிகளைத் தொடர்ந்து நான் இன்று (27.03.2021) சோதனை மேற்கொண்டதில், கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வீட்டில் வேறு யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. எனது மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி, நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.