உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இருந்து வந்தது. இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். ஆனால் கடந்த ஆண்டு இந்தப் பெருமையை, குஜராத்தின் மோட்டேராவில் 800 கோடி செலவில் உருவான மைதானம் கைப்பற்றியது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடியோடு இணைந்து தொடங்கி வைத்த இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்திற்கு முதலில் ‘சர்தார் வல்லபாய் படேல் மைதானம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த மைதானம் தற்போது ‘நரேந்திர மோடி மைதானம்’ எனப் பெயர் மாற்றப்படுள்ளது.
பெயர் மாற்றப்பட்டுள்ள இந்த மைதானத்தை, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (24.02.2021) திறந்து வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், குஜராத் மாநில ஆளுநரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.