ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 23வது லீக் ஆட்டம் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரரான குயின்டன் டி காக் 140 பந்துகளில் 174 ரன்களை விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 174 ரன்களில் குயின்டன் டி காக் 7 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் விளாசினார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் ஐடன் மார்க்ராம் 69 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அதேபோல், ஹென்ரிச் கிளாசென் 49 பந்துகளில் எட்டு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்திருந்த போது 49 ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். ஆட்ட இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்தது.
வங்கதேசம் அணியில் ஹசன் மஹ்மூத் இரு விக்கெட்களையும், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.
தொடர்ந்து 383 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி துவக்கம் முதலே சீரான இடைவெளியில் தனது விக்கெட்களை இழந்தது. இறுதியில், 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் அணியில் மஹ்முதுல்லாஹ் சதம் விளாசினார். 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 111 பந்துகளில் 111 ரன்களை எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் செற்ப ரன்களில் தங்களது விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில், ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களையும், ரபாடா, வில்லியம்ஸ், மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா இரு விக்கெட்களையும், கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
உலகக் கோப்பை லீக் போட்டியில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் வென்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று வங்கதேசம் அணி 10வது இடத்திலும் உள்ளது.