Skip to main content

கங்குலி பெயரைக் கூறியது ஏன்? ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Shreyas Iyer

 

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸின் போது கங்குலி பெயரைக் கூறியது ஏன் என ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.

 

13-ஆவது ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது நாளான நேற்றைய முன்தினம் நடைபெற்ற போட்டியில், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இறுதிக்கட்டம் வரை பரபரப்பு நீடித்த அப்போட்டியில், டெல்லி அணி சூப்பர் ஓவரில் அபார  வெற்றி பெற்றது. டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டாஸ் போடும் நேரத்தில் ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலிக்கு நன்றி தெரிவித்தார். இது ரசிகர்களைக் குழப்பமடையச் செய்தது.

 

ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார். நடப்புத் தொடரில் டெல்லி அணியுடன் எந்தத் தொடர்ப்பிலும் இல்லாத கங்குலிக்கு ஏன் நன்றி தெரிவித்தார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

 

அதில் அவர், "நான் கிரிக்கெட் வீரனாகவும், அணி கேப்டனாகவும் ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்திற்கான நன்றியை அழுத்தமாகப் பதிவு செய்வதற்குத்தான் அவர்கள் பெயரை நேற்று நான் உச்சரித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது, கங்குலி டெல்லி அணியின் வழிகாட்டியாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.