Skip to main content

கெயில் - ராகுலைத் தவிர பஞ்சாப் அணியில் யாருமே இல்லையா?

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான டி20 போட்டி நேற்று இரவு, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் சார்பில் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்திருந்தார். 

 

Rajastan

 

 

 

முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில், சேஷிங் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது கடந்தகால வரலாறு. அதை உண்மையாக்கும் வகையில் பஞ்சாப் அணியின் பேட்டிங் இருந்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலைத் தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடாததே காரணம் என பஞ்சாப் பயிற்சியாளரான ஹாட்ஜ் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் மோசமாக தோற்காததற்கும் ராகுலின் பேட்டிங்கே காரணமாக இருந்தது.

 

நேற்றைய போட்டியில் 70 பந்துகளைச் சந்தித்த கே.எல்.ராகுல் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் மற்றும் ஸ்டாய்னஸைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பி ஏமாற்றினர். 

 

KXIP

 

இது பஞ்சாப் அணிக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னால் ராஜஸ்தான் அணியுடன் பஞ்சாப் மோதுவதற்கு முந்தைய போட்டி வரை அந்த அணியின் தொடக்க வீரர்கள் கெயில் (5 போட்டிகள் மட்டுமே) மற்றும் ராகுல் இணை சேர்ந்து 473 ரன்கள் அடித்திருந்தனர். இது பஞ்சாப் அணி இந்த சீசனில் அடித்த மொத்த ரன்களில் 60 சதவீதமாக இருந்தது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ராகுல் மற்றும் கெயில் முறையே 84, 8 மற்றும் 95, 1 ரன்கள் எடுத்திருந்தனர். இந்தூர் போட்டியில் ராகுலின் அதிரடி ஆட்டமே வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஒருவேளை கெயில் கைகொடுத்திருந்தால் கூட ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

 

KXIP

 

கருண் நாயர், மனோஜ் திவாரி, ஆரோன் ஃபின்ச் போன்ற ஐ.பி.எல். அனுபவமிக்க வீரர்கள் கூட பெரிதாக விளையாடதே பஞ்சாப் அணியின் பின்னடைவிற்குக் காரணம். பஞ்சாபின் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இனிவரும் போட்டிகளில் இந்தத் தவறுகள் களைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.