
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரானது வரும் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இன்னும் 20 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் ஐபிஎல் குறித்தான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சென்னை அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணியும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் சென்னை அணியின் அதிரடித் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "உங்களையும், உங்கள் குடும்பத்தை பற்றியும் நினைத்து கொண்டிருக்கிறேன் சுரேஷ் ரெய்னா. சென்னை அணியின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் விளையாடியுள்ளீர்கள். சென்னை அணியின் இதயத்துடிப்பே நீங்கள் தான். இந்த தொடரில் உங்களை பெருமையடைய செய்வோம். இது சிறந்த தொடராக இருக்கப்போகிறது. ஐபிஎல் சிறப்பாக நடக்க என்னால் என்ன பங்களிப்பு அளிக்க முடியுமோ அதைச் செய்வேன். எந்த தடங்கலுமின்றி இத்தொடர் நடக்க வேண்டும்" என உருக்கமாக பேசியுள்ளார்.