கிரிக்கெட் விளையாட்டைப் பொருத்தவரை ஸ்லெட்ஜிங் எனப்படும் வம்புக்கிழுக்கும் முறை இன்றும் பல நாட்டு வீரர்களால் பின்பற்று வருகிறது. ஆனால், அதற்கே பல கெடுபிடிகளை விதித்து கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது ஐ.சி.சி. பொதுவாக இதை அதிகமாக பயன்படுத்துவது ஆஸ்திரேலிய அணியாகத்தான் இருக்கும். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது மிட்சல் ஜான்சன் இந்திய வீரர்களை வம்புக்கிழுப்போம் என வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் இந்த விளையாட்டில் சக வீரரை அவமதிக்கும் வேலையிலும் சில வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இதில் நான்காவது நாள் ஆட்டத்தின் போது 417 ரன்கள் என்ற கடுமையான இலக்கை அடைய போராடிக் கொண்டிருந்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
Pure cheek from Nathan Lyon ??? #SAvAUS pic.twitter.com/vhuM4tgOHQ
— Josh Money (@JoshMoneyFOX) March 4, 2018
ஒரு ரன் எடுப்பதற்காக பந்தைத் தட்டிவிட்டு ஓடிய அவர், வார்னர்/நாதன் லயன் இணையின் முயற்சியால் ரன்அவுட் ஆனார். அப்போது, டிவில்லியர்ஸை ரன்அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் ஓடிய லயன், தன் கையில் இருந்த பந்தை வேண்டுமென்றே டிவில்லியர்ஸ் மீது ஏளனமாக போட்டுவிட்டு சென்றார். இது கேமராவில் பதிவாகியுள்ளது. இதுமட்டுமின்றி டிவில்லியர்ஸை ரன்அவுட் ஆக்கிய டேவிட் வார்னரும் மிகக்கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
@davidwarner31 and Nathan Lyon behaviour terrible there. Great wicket but seriously pull your heads in. #embarrassing #SAvsAUS @CricketAus
— Michael Johnson (@japanesejohno) March 4, 2018
அவர்களது இந்த செயல் பலரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் ஆஸ்திரேலிய வீரர்களின் செயலுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.