உடல்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் முகமது ஷமி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தமது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 14ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் அஜிங்யா ரகானே தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், நேற்று தேசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலமாக பெங்களூருவில் நடைபெற்ற உடல்தகுதி சுற்றில் முகமது ஷமி தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முகமது ஷமிக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சைனி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற ராஞ்சி கோப்பைத் தொடரில் சைனி 8 போட்டிகளில் 34 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.