உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வங்கதேச அணி 330 ரன்கள் எடுத்து. இதில் 21 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் ஆகும். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 21 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் கொடுத்த அணி அதே 21 ரன்னில் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன் ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான அவர் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் 75 ரன்களும், பந்துவீச்சில் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த விக்கெட் அவரது 250 ஆவது விக்கெட் ஆகும். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 5000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார். வெறும் 199 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 250 விக்கெட்டுகளை, 5792 ரன்களையும் சேர்த்து சிறந்த ஆல் ரவுண்டர்களான ஜெயசூர்யா, காலீஸ், அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதற்கு முன் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் ஆகியோர் மட்டுமே 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
250 விக்கெட்டுகள் மற்றும் 5000 ரங்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியல்...
1. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் 269 விக்கெட்டுகளையும் 5080 ரன்கள் சேர்த்துள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 395 விக்கெட்டுகளையும், 8,064 ரன்கள் சேர்த்துள்ளார்
3.இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளையும் 13,430 ரன்களும் சேர்த்துள்ளார்.
4.தெ.ஆப்பிரிக்க முன்னாள்வீரர் ஜேக்ஸ் காலிஸ் 273 விக்கெட்டுகளையும், 11,579 ரன்களும் சேர்த்துள்ளார்.