இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துகொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய லபூஷனே 108 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் நடராஜன், தாக்குர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா, முதல் இன்னங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் (62), தாக்குர் (67) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா, மழையினாலும் இந்திய பந்துவீச்சினாலும் தடுமாறியது. இருப்பினும் ஸ்டீவன் ஸ்மித்தின் (55) உதவியோடு 294 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
328 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5ஆம் நாளான இன்று (19.01.2021) 60 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 91 (146) ரன்கள் எடுத்தார். நிதானமாக விளையாடி வரும் புஜாரா 43 (166) ரன்கள் எடுத்துள்ளார். ரஹானே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற இன்னும் 153 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.