இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவி வருகின்றன.
இந்தநிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க உதவும் வகையில், டெல்லியில் உள்ள 250க்கும் மேற்பட்ட தொழிற்முனைவோர்கள் ‘மிஷன் ஆக்சிஜன்’ என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த அமைப்புக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். இதுகுறித்து அவர், "இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து போராடுபவர்களின் பின்னால் நாம் இணைத்து நிற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே பிளாஸ்மா தானம் அளிக்க உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா முதல் அலையின்போதும் சச்சின் டெண்டுல்கர் ‘பி.எம் கேர்ஸ்’ ஃபண்டுக்கு 25 லட்சமும், மஹாராஷ்ட்ரா முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.