டெஸ்ட் போட்டிகளில் ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 74. ஆனால் 2018-ஆம் ஆண்டில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட் இதை விட குறைவு(71). 2018-ல் தோனியின் பேட்டிங் சராசரி 25. தோனியின் 14 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் குறைந்த பேட்டிங் சராசரி மற்றும் குறைந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 2018-ல் தான். 4*(3), 37(59), 33(37), 8(17), 36(67), 7(11) இதுதான் கடந்த 2018-ல் ரன் சேசிங்கின் போது தோனியின் புள்ளிவிவரங்கள். இப்படி பல விமர்சனங்கள் முன்னாள் வீரர்களாலும், சில ரசிகர்களாலும் தோனியின் மீது வைக்கப்படுகின்றன.
தோனியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் புள்ளிவிவரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சூழ்நிலைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. 2011 உலகக்கோப்பை காலகட்டங்களின்போது சச்சின், சேவாக், கம்பீர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். கோலி, தோனி, யுவராஜ், ரெய்னா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். இப்படி அனுபவம் வாய்ந்த டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட உதவினர்.
2015 உலகக்கோப்பை காலகட்டங்களின்போது ரோஹித், தவான், கோலி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ரெய்னா, ரஹானே, தோனி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். சிறந்த டாப் ஆர்டர் வரிசை, ஓரளவு நல்ல மிடில் ஆர்டர். ஆனால் 2011 உலகக்கோப்பையில் இருந்த அளவுக்கு பலமான மிடில் ஆர்டர் இல்லை.
தற்போது உலகக்கோப்பைக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. 2015 உலகக்கோப்பைக்கு பிறகு 4,5,6,7 ஆகிய இடங்களில் அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, அம்பதீ ராய்டு, கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ரவீந்தர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி என பலர் விளையாடியுள்ளனர். ஆனால் தோனியை தவிர வேறுயாரும் இன்னும் தனது இடத்தை உறுதி செய்யவில்லை.
2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடிய மனீஷ் பாண்டே அதற்கு பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. 2016 முதல் 2018 பிப்ரவரி வரை தொடர்ந்து விளையாடிய ரஹானே இப்போது அணியில் இல்லை. 2016, 2017-களில் விளையாடாத ராயுடு தற்போது அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 2017-2018 காலங்களில் ஒருசில போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த கார்த்திக் தற்போது அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 2016 முதல் 2018 வரை ஆடிவந்த கேதர் ஜாதவ் தற்போது 11 பேர் கொண்ட அணியில் இல்லை.
கடைசி 4 ஆண்டுகளில் தோனியை தவிர யாரும் மிடில் ஆர்டரில் தொடர்ந்து விளையாடவில்லை. இந்த நிலையில் சுப்மான் கில், விஜய் சங்கர் புதிதாக அழைக்கப்பட்டுள்ளனர். 2015-க்கு பிறகு தோனிக்கு முன்பும், பின்பும் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய யாரும் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இல்லை. லோயர் ஆர்டர் பேட்டிங் இன்னும் மோசமாக உள்ளது. ஜடேஜா, பாண்டியா விளையாடினால் 7-வது இடத்தில் ஆடுவார்கள். 8,9,10,11 ஆகிய இடங்களில் விளையாடுபவர்களில் புவனேஷ் குமார் தவிர வேறு எந்த பவுலரும் பேட்டிங்கில் பங்களிப்பதில்லை.
5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும் தோனிக்கு பார்ட்னர்சிப் கொடுக்க நல்ல இணை இதுவரை இல்லை. கடந்த சில தொடர்களாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கார்த்திக் ஒருபுறம் அதிரடி ஆட, தோனி நிதானம் கலந்த அதிரடியுடன் ஆட்டத்தை பினிஷ் செய்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு கேதர் ஜாதவ் நல்ல பார்ட்னர்சிப் கொடுத்தார். கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் இந்த தொடரில் தோனிக்கு கொடுத்த பார்ட்னர்சிப் போல, தோனிக்கு நல்ல பார்ட்னர்சிப் சில ஆண்டுகளாக அதிகம் அமையவில்லை.
சர்மா தொடக்க காலங்களில் மிடில் ஆர்டரிலும், பிறகு ஒப்பனிங்கிலும் விளையாடி வருகிறார். விராட் கோலியை பொறுத்தவரை பெரும்பாலும் முதல் விக்கெட்டிற்கு இறங்கி வருகிறார். தோனி அணியின் நிலைமையை பொறுத்து மிடில் ஆர்டரில் பல பொசிசன்களில் ஆடிவருகிறார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆகியோரிடம் உள்ள எதிர்பார்ப்பும், அவர்களிடம் உள்ள பொறுப்பும் முற்றிலும் வேறுபட்டவை.
ரோஹித், தவான், கோலி ஆகியோரில் குறைந்தது இருவர் ஒவ்வொரு தொடரிலும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனால் அவர்களுக்கு நல்ல பார்ட்னர்சிப் கிடைக்கிறது. நிலைத்தன்மை இல்லாத மிடில் ஆர்டர், நிலையில்லாத பேட்ஸ்மேன்கள் தேர்வு, அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்கள், பலவீனமான பேட்டிங் கொண்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பெரிய அளவில் கிடைக்காத நல்ல பார்ட்னர்சிப் என தோனியை சுற்றிலும் அளவுக்கு அதிகமான சுமை உள்ளது. இதில் எதையும் தோனியின் விமர்சகர்கள் கணக்கில் எடுக்காமல், வெறும் புள்ளிவிவரங்களை மட்டுமே பேசுகின்றனர்.
20,30 ரன்களுக்கு 3,4 விக்கெட்களா? கடைசி 15, 20 ஓவர்களில் 200,250 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவேண்டுமா? இப்படி இரு முற்றிலும் மாறுபட்ட நேரங்களிலும் இந்திய அணி எதிர்பார்ப்பது ஒரே ஒருவர். அவர் தான் தோனி எனும் சகாப்தம். தன் ஒருநாள் போட்டி வரலாறு முழுவதும் அணியின் தேவைக்கேற்பவே களமிறங்கினார். தனக்கு ஏற்ற சிறந்த பொசிசன் என்ற ஒன்று இருந்தாலும், அணியின் நன்மைக்காகவும், வெற்றிக்காகவும் அதை தியாகம் செய்தார். பல வெற்றிகள், பல சாதனைகள், பல தியாகங்கள் ஆகியவற்றையும் கடந்து, பல விமர்சனங்களையும் சந்தித்தவர் தோனி மட்டுமே. ஆனால் ஒவ்வொரு முறையும் விமர்சனங்களுக்கு தன்னுடைய ஆட்டத்தின் மூலமே பதிலளித்து வருகிறார்.
வயதான போதிலும் இன்றும் மற்ற பார்ட்னர்சிப்பில் எடுக்கப்படும் 1 ரன்கள், தோனியின் பார்ட்னர்சிப்பில் இரண்டு ரன்களாக மாறுகிறது. கீப்பிங்கில் மாஸ் காட்டுகிறார். அன்றைய தோனியின் ஷாட்கள் இன்று இல்லை என்கின்றனர் அவரை விமர்சிப்பவர்கள். ஆம். இல்லை. சச்சின் தொடக்க காலத்தில் ஆடிய அதிரடி அவரின் பிற்காலத்தில் இல்லை. ஏனெனில், சேவாக் வருகைக்கு முன்பு, பின்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும் சச்சினின் பேட்டிங்கில் மாற்றம் இருந்தது. 2008-க்கு பிறகு நாம் சச்சினிடம் எதிர்பார்த்தது நிதானம், அவ்வப்போது அதிரடி. இதை அனைத்தையும் தாண்டி இந்திய அணியின் பேட்டிங்கை வழிநடத்தி ஒருங்கிணைக்கும் பொறுப்பு சச்சினிடம் இருந்தது. அதை சச்சின் சிறப்பாக செய்தார். அவரின் ஆரம்பகால அதிரடியை நாம் எதிர்பார்க்கவில்லை.
இன்று தேவை தோனியின் ஷாட்கள் இல்லை. மிடில் ஆர்டர் பேட்டிங்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பு. பினிஷிங் ஸ்கில். நல்ல விக்கெட் கீப்பிங். விராட் கோலியையும், இளம் அணியையும் வழிநடுத்துவது. இதை தோனி சிறப்பாக செய்து வருகிறார். ஒருமுனையில் அவர் தனது ஆட்டத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்வார். இன்றைய காலங்களில் அவருக்கு தேவை, நல்ல பார்ட்னர்சிப்பும், நிலையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் மட்டுமே.