இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சில போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா, ப்ளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.
இருப்பினும் காயம் முழுமையாக குணமடையாததால் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், அவர் டெஸ்ட் தொடரில் ஆடுவார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காக தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்றுவந்தார். மேலும் அவர், வருங்காலத்தில் காயங்கள் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க உடலைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் ரோகித் சர்மாவிற்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றது. அதில், அவர் தனது உடல் தகுதியை நிரூபித்தார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா, விரைவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குப் புறப்படுவார் என எதிர்பார்க்கப்பட நிலையில், இன்று அதிகாலையில் அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ரோகித், துபாய் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.