Skip to main content

தினேஷ் கார்த்திக் படைத்த புதிய சாதனை! - இந்தியா அசத்தல் வெற்றி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கையில் நிடகாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று மாலை கொழும்புவில் வைத்து நடைபெற்றது. வங்காளதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தடுமாற்றத்துடனே விளையாடியது.

 

Dinesh

 

ஒருகட்டத்தில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலைவந்தபோது, மணீஷ் பாண்டே ரூபல் ஹூசைனின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வந்தவுடன் அதிரடியாக ஆடி அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் இன்னொரு வீரரான விஜய் சங்கர் பதற்றத்தில் சொதப்பி வெளியேற, ஸ்டிரைக்கு வந்த தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். 8 பந்துகளே சந்தித்திருந்த அவர் 29 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 362.50. 

 

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இந்திய வீரர் கூட கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்ததில்லை. உலகின் பெஸ்ட் ஃபினிஸர்களில் ஒருவரான தோனி கூட பவுண்டரிகளின் மூலமாகவே இந்தியாவை வெற்றிபெறச் செய்திருக்கிறார். தற்போது அந்த புதிய சாதனையைப் படைத்தது மட்டுமின்றி, ஒரே மேட்சின் அதிரடி ஆட்டத்தின் மூலம் லைம்லைட்டிற்கு வந்து, ரசிகர்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.