இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே தங்களது விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஸ்கோரை 33ல் இருந்து 237க்கு கொண்டுவந்தனர். அப்போது ரோஹித் தனது விக்கெட்டை இழக்க அறிமுக ஆட்டக்காரரான சர்பராஸ் கான் களத்திற்கு வந்தார்.
ரஞ்சி ட்ராபி போன்ற உள்நாட்டு தொடர்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த, 26 வயதான சர்ஃபராஸ் கான், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடினார். சர்ஃபராஸ் கான், முதல்தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடி, 69.85 சராசரி உடன் 3,912 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 11 அரைசதங்களும் அடக்கம்.
இந்த டெஸ்ட் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய மூவரும் டெஸ்ட் தொடரை தவறவிட்ட நிலையில், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ரசிகர்களும், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என அனைவரும் காத்திருந்தபோது, கடந்த இரு போட்டிகளிலுமே சர்ஃபராஸ் கான் 11 பேர் பெயர் பட்டியலில் இடம் பெறாமாலேயே இருந்தார்.
இறுதியாக நேற்று துவங்கிய மூன்றாவது போட்டியின் 11 பேர் பெயர் பட்டியலில், ‘சர்ஃபராஸ் கான்’ பெயர் இடம் பெற்றது. இவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினார். இந்த நிகழ்வை சர்ஃபராஸின் தந்தை நௌஷாத் கான் மற்றும் சர்ஃபராஸின் மனைவி ஆகியோர் ஆனந்த கண்ணீருடனும் நெகிழ்வுடனும் கண்டுகளித்தனர். அப்போது, தனது மகனின் முதல் தொப்பியை தனது கைகளில் எடுத்து முத்தமிட்ட சர்ஃபராஸின் தந்தை, மகனை ஆரத்தழுவினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் சர்ஃபராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி பெரும் போராட்டங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பினை அட்டகாசமாக பயன்படுத்திய சர்ஃபராஸ் கான், களத்திற்கு வந்ததுமே பந்துகளை பவுண்டிரி லைன்களுக்கு விரட்டி அடித்தார். தனது அதிரடியான ஆட்டத்தால் 48 பந்துகளில் தனது முதல் சர்வதேச போட்டியில் முதல் அரை சதத்தை விளாசினார். தொடர்ந்து களத்தில் இருந்த சர்ஃபராஸ் கான் எதிர்முனையில் இருந்த ஜடேஜாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஜடேஜா, 99 ரன்களில் இருந்தபோது, 82வது ஓவரில் 5 வது பந்தை எதிர்க்கொண்டபோது தனது சதத்தை அடைய சர்ஃபராஸ் கானுக்கு சிங்கிள் கால் கொடுத்தார். ஆனால், ஃபீல்டரின் கையில் பந்து இருப்பதைக் கண்டதும் ஜெடேஜா மீண்டும் க்ரீஸினுள் செல்ல, எதிர் முனையில் இருந்து மேலே ஏறிய சர்ஃபராஸ் கானால் க்ரீஸினை நெருங்க முடியவில்லை. அதற்குள் சர்ஃபராஸ் கான் ரன் அவுட் செய்யப்பட்டு 62 ரன்களில் வெளியேறினார். இவரின் ரன் அவுட் இந்திய ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருந்தது.
இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக ஜடேஜா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்” என சர்ஃபராஸ் கானை டேக் செய்து பதிவு செய்தார்.