ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11ஆவது சீசன் நேற்று மும்பையில் தொடங்கியது. இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் கேப்டன் கம்பீர் அதிகபட்சமாக 42 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியின் சார்பில் முஜீப் உர் ரஹ்மான், மோகித் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 14 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்தத் தொடரில் அதிவேகமான அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கருண் நாயரும் 33 பந்துகளில் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, 4 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில், 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.