டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே உலகக் கோப்பை 2024-ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.