இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.
பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தாலும், விராட் கோலியின் பதவி விலகல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சுற்றிவருகின்றன. அஷ்வின், விராட்டின் கேப்டன்சி குறித்து பிசிசிஐயிடம் புகாரளித்ததாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா, விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகாரளித்ததாககவும், அதையடுத்து விராட் கோலி கேப்டன்சி குறித்து பிசிசிஐ கருத்து கேட்டதாகவும், இதன் தொடர்ச்சியாகவே விராட் இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது பிசிசிஐ இந்த தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்றிடம் இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐயின் பொருளாளர், "இந்திய கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரரும் பிசிசிஐயிடம் எழுத்துப்பூர்வமாகவோ, வாய்வார்த்தையாகவோ எந்த ஒரு புகாரையும் அளிக்கவில்லை. தொடர்ந்து வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு பிசிசிஐயால் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்க முடியாது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை யார் சொன்னது?" என கூறியுள்ளார்.