
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.