சி.எஸ்.கே. அணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக கருதப்பட்ட கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி சென்னை வான்கடே மைதானத்தில் வைத்து, ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் சேஷிங்கில் ஈடுபட்ட சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் கேதர் ஜாதவ், 13ஆவது ஓவரில் தொடைத்தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய டுவெயின் பிராவோ, மிகச்சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 30 பந்துகளைச் சந்தித்த அவர், 68 ரன்கள் எடுத்து பும்ராவின் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதையடுத்து 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி வீரராக களமிறங்கிய கேதர் ஜாதவ், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டர் விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார். கடைசி ஓவரின் மிகச்சிறப்பாக ஆடிய அவரது ஆட்டம் பலரிடமும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், கேதர் ஜாதவுக்கு தொடைத் தசையில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால், இந்தத் தொடரில் இருந்து விலகுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, ‘மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேதர் ஜாதவ், இந்தத் தொடரில் இருந்து விலகியது அணிக்கு மிகப்பெரிய இழப்பு’ என தெரிவித்துள்ளார்.