Skip to main content

செய்த தவறுக்கு தண்டனை; மேல்முறையீடு கிடையாது! - ஸ்மித் அறிவிப்பு

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி, கேப்டவுனில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், நான்காவது போட்டியில் விளையாட ஸ்மித், பான்கிராஃப்டுக்கு தடை விதித்த ஐசிசி போட்டிக்கட்டணத்தில் முறையே 100% மற்றும் 75% அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 

இருந்தபோதிலும், இந்த விவகாரம் ஆஸி. கிரிக்கெட் வாரியத்திற்கே ஏற்பட்ட இழுக்கு என்று பலரும் பேச, சம்மந்தப்பட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடைவிதித்து உத்தரவிட்டது.

 

 

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வீரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அணியை வழிநடத்திய கேப்டன் என்கிற முறையில், நடந்த தவறுகள் அனைத்திற்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதனால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதில்லை. செய்த தவறை உணர்த்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தந்துள்ள இந்தத் தண்டனை நான் ஏற்றுக்கொண்டேன்’ என பதிவிட்டுள்ளார்.