பெண்கள் பிரீமியர் லீக்கில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டிகள் இந்தாண்டு முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் என ஐந்து அணிகள் மோதின. 5 அணிகளும் தலா 8 லீக் போட்டிகளில் விளையாடியது. இத்தொடரில் இன்றைய இறுதிப் போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் லேன்னிங் மட்டும் 35 ரன்களை எடுத்து ஆறுதல் அளிக்க பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் வந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடி தலா 27 ரன்களைக் குவிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியில் ஹெய்லி மாத்யூஸ், வோங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். மெயிலி கெர் 2 விக்கெட்களை எடுத்தார்.
132 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹெய்லி மாத்யுஸ் மற்றும் யாஸ்டிகா பாட்டியா ஏமாற்றம் அளித்தனர். பின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கர் மற்றும் ப்ரண்ட் அணியை சரிவில் இருந்து மீட்டனர். மெதுவாக மும்பை அணி வெற்றி இலக்கை எட்டிக்கொண்டு இருந்தபோது கேப்டன் ஹர்மன் ப்ரீத் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 19.3 ஓவர்களில் 134 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ப்ரண்ட் 60 ரன்களை குவித்தார்.