Skip to main content

யுவராஜை முன்னாடியே அனுப்பியிருக்கலாம்! - ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது பஞ்சாப்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான வெற்றியின் மூலம் மீண்டும் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

 

Mumbai

 

நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தத் தொடர் முழுவதும் சொதப்பலாக ஆடிவந்த பொல்லார்ட் ஃபார்முக்கு திரும்பி அதிவேகமாக அரைசதத்தைக் கடந்தார்.

 

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 18 ரன்களில் வெளியேறி ஏமாற்ற, பின்ச் - ராகுல் இணை சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. இருந்தபோதும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய வழக்கம்போல் எல்லா சுமைகளும் ராகுல் தலைக்கே வந்தன. அவரும் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 19ஆவது ஓவரில் வெளியேற, மும்பையின் வெற்றிவாய்ப்பு எளிதானது.

 

KXIP

 

ஒருகட்டத்தில் துவண்டுபோன மும்பை அணியை வலுவான கட்டத்திற்கு கூட்டிவந்த பொல்லார்டை கேரம் பால் மூலம் வெளியேற்றிய அஸ்வின், அந்த அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், பேட்டிங் வரிசையை தேர்வு செய்ததில் அவர் சொதப்பினார் என்றே சொல்லலாம். கருண் நாயர், மாயன்க் அகர்வால் போன்ற வீரர்களை அணியில் எடுக்காமல் யுவராஜை அணியில் சேர்த்தார். ஆனால், முக்கியமான தருணத்தில் ராகுலுக்கு துணையாக அக்ஸர் படேலை அனுப்பி ஏமாற்றினார். ஒருவேளை யுவராஜை முன்னரே அனுப்பியிருந்தால் தனித்து ஆடிய ராகுலுக்கு பக்கபலமாக இருந்திருக்கும். குறைவான நெட் ரன் ரேட் இருக்கும் காரணத்தால், நேற்றைய போட்டியின் தோல்வியுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது பஞ்சாப் அணி.  இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.