16 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 31 இல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக 36 வயதாகும் கொல்கத்தா வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நிதிஸ் ராணா கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசனும் விலகியது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் இளம் வீரர்கள் என்பதால் அந்த அணி தற்போது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
பெங்களூர் அணியில், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரஜத் படிதார் விலகுவதாக பெங்களூர் அணி அறிவித்துள்ளது. ரஜத் படிதாருக்கு மாற்றாக வீரர்களை அறிவிக்க வேண்டாம் என்று பெங்களூர் அணியின் பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஐபிஎல் சீசனின் முதல் 7 போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடமாட்டார் என்றும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் அவர் ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு பிறகே இந்தியாவிற்கு வருவார் எனவும் தகவல் வெளியானது. இந்தியா வந்ததும், ஹேசில்வுட் பயிற்சி எடுத்துக்கொண்டு அணிக்கு திரும்ப ஒரு வார காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில் முதல் 7 போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.
மும்பைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரீஸ் டாப்லி பீல்டிங்கின் போது கீழே விழுந்ததால் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரஜத் படிதாரும் தொடரில் இருந்து விலகியது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சென்னை அணியுடனான போட்டியில் பீல்டிங்கின் போது கால் முட்டியில் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் வில்லியம்சனுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.