ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளம் வீரரான முகமது சிராஜ் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. இத்தொடருக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தினுள் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக முகமது சிராஜின் தந்தை நேற்று மரணமடைந்தார். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் முகமது சிராஜ் உள்ளதால், ஹைதராபாத்தில் நடைபெறும் அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பத்திரிகை ஒன்றிடம் இது குறித்து பேசிய முகமது சிராஜ், "மகனே... நீ நம் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும். இதுதான் என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. இதை நான் நிச்சயம் செய்வேன். என்னுடைய ஆரம்பக்காலங்களில் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டி என்ன மாதிரியான கஷ்டங்களை அவர் அனுபவித்தார் என்பது எனக்குத் தெரியும். அவரது இறப்பு செய்தியைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது. என் வாழ்வின் மிகப்பெரிய ஆதரவை இழந்துள்ளேன். இந்தியாவிற்காக நான் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. இது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதை உணர்கிறேன்" என உணர்ச்சிமயமாகப் பேசினார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் முகமது சிராஜிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.