மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார்.
பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.