இந்திய வீரர் பும்ராவை உலகின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணி வீரர் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிறத் தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் பும்ரா குறித்து பேசுகையில், "கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில், வெறும் 45 ரன்களை விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 20 ஓவர் போட்டிகளில் இதை பார்க்க முடியாது. தற்சமயத்தில் உலகின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது பும்ராதான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.