8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.
ஆஸ்திரேலிய மைதானங்கள் இந்திய வீரர்களில் பலருக்கு புதிது என்பதால் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. அங்கு மேற்கு ஆஸ்திரேலியாவுடன் இரு போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டியில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
இந்நிலையில் உலக் கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்தது. இதன் பின் ஆட வந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கடைசி ஓவரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முஹம்மது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில் இன்று இந்திய அணி நியூசிலாந்து உடன் தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தை விளையாட இருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டிகளில் இறுதி ஓவர்களில் இந்திய அணி விக்கெட்களை எடுக்கத் தவறியது பெரும் பேசு பொருளுக்கு உள்ளானது. எனினும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 6 விக்கெட்களை எடுத்து அசத்தியது. இந்நிலை உலகக் கோப்பை முழுவதும் தொடர்ந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.
வீரர்கள் விவரம், இந்தியா அணி : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, ரிஷப் பந்த்.
நியூசிலாந்து அணி: டெவோன் கான்வே, ஃபின் ஆலன், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட்.