அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நைட் ரைடர்ஸ் குழுமம் பங்கெடுக்க உள்ளது.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் எனும் பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், 2022 -ஆம் ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க வேலைகள் தற்போது ஆரம்பித்துள்ளன. இத்தொடரில், மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நைட் ரைடர்ஸ் குழுமத்தின் சார்பாக ஒரு அணியும் பங்கேற்க உள்ளது. அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் எனும் ஏ.சி.இ நிறுவனம் மற்றும் யூ.எஸ்.ஏ கிரிக்கெட் அமைப்பு இணைந்து இத்தொடரை நடத்த உள்ளன.
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் துணை உரிமையாளராகச் செயல்பட்டு வரும் நைட் ரைடர்ஸ் குழுமம், ஐ.பி.எல் மற்றும் சி.பி.எல் தொடரில் பங்கெடுத்து வந்தநிலையில், தற்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால் பதித்துள்ளது. இது குறித்து ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் நைட் ரைடர்ஸ் பிராண்டை உலகளவில் விரிவுபடுத்தி வருகிறோம், அமெரிக்காவில் டி-20 கிரிக்கெட்டுக்கான வாய்ப்பு உள்ளதை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கிறோம். மேஜர் லீக் கிரிக்கெட் அதன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்துப் பகுதிகளையும் கொண்டுள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம், மேலும் வரும் ஆண்டுகளில் எங்கள் இணைவை மகத்தான வெற்றியாக மாற்ற எதிர்பார்த்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.