இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ., அக்டோபர் 2020- ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2021- ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (15/04/2021) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒப்பந்த பட்டியலில் 'A+' பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நீடிக்கிறார். அதேபோல் 'A+' பிரிவில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
'A' பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், ராகுல், ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
'B' பிரிவில் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
'C' பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஹால், சிராஜ் ஆகிய 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
'A+' பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், 'A' பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 5 கோடியும், 'B' பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியும், 'C' பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் ஆண்டு வருமானமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியலில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.