மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து பொல்லார்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய இளம் வீரரான சூர்யகுமார் யாதவ், ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பி.சி.சி.ஐ அறிவித்த வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள், மூத்த வீரர்கள் எனப் பலரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மும்பை அணியின் தற்காலிகக் கேப்டனாக செயல்பட்டுவரும் பொல்லார்ட், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "தொடக்க விக்கெட்டுகளை இழந்த பின்னும், சூர்யகுமார் யாதவ் அதே வேகத்தில் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் சரி, தான் சிறந்த வீரர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவரது ஆட்டம் உள்ளது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து உள்ளுக்குள் நிச்சயம் அதிருப்தியாக இருப்பார். அவரது ஆட்டத்திறன் ஒவ்வொரு போட்டியிலும் மேம்பட்டு வருகிறது. இதே மாதிரியான நிலையான ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தும் போது, நிச்சயம் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் கட்டத்தை அவர் நெருங்கிவிட்டார் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்" எனக் கூறினார்.