Skip to main content

"திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!" - CSK திக் திக் வெற்றி

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

ஐபிஎல் 2018 பல உணர்ச்சிகள், பல நிகழ்வுகளைத் தாண்டி கோலாகல ஆரம்பம் கண்டுள்ளது. முதல் போட்டி, இருபெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிக்கொண்ட  எதிர்பார்ப்பு மிக்க போட்டி. போட்டியை முழுதாய் பார்த்தவர்களுக்கு சிறப்பான விருந்து, அவசரப்பட்டு பாதியிலேயே தூங்குனவங்களுக்கு, பெரிய மிஸ் தான். எழுந்தவுடன் முழுசா பாக்கலையேன்னு வருத்தப்படுவாங்க.
 

csk wins toss



சென்னை ரிட்டன்ஸ்காக காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு முதல் போட்டியின் வெற்றி புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் மாறி மாறி சாதகமாக இருந்த ஆட்டம், இரண்டாம் பாதியில் மும்பை அணியின் வசம் தொண்ணூறு சதவிகிதம் இருந்தது. நம்ம சென்னை அணியின் டான்சர், மன்னிக்கவும் ஆல்ரவுண்டர் பிராவோ தனி ஒருவனாக ஆடிய சூறாவளி ஆட்டம் தான் வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றது.

 

csk vs mi



மேட்ச் தொடக்கத்துல டாஸ் வென்றதும் மும்பை வான்கடே மைதானம் மிரண்டு போற அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் ரசிகர்கள் உற்சாகமாயினர். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து,வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில், சென்னை அணியின் தீபக் சாகர் மற்றும் வாட்சன் கூட்டணி சிறப்பாக பந்து வீசி ரன் வேகத்தை மட்டும் இல்லாமல் விக்கெட்களையும் வீழ்த்தினர். சமீபத்தில் இந்திய அணியில் விளையாடிய ஷரத்துல் தாகூர்க்கு வாய்ப்பு கிடைக்காமல் தீபக் சாகர்க்கு கிடைத்தது. சிறப்பாக பயன்படுத்தி சென்னையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். எனினும் இஷான் கிஷான், சூர்யகுமார், குர்னால் பாண்டியாவின் சிறப்பான பேட்டிங் மூலம் வெற்றிபெற தேவையான ரன்களை எடுத்தனர்.

 

Bravo shot


இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி மார்கண்டேவின் சுழலில் சற்றுநிலைகுலைந்து போனது. ஹர்டிக் பாண்டியாவும் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்கள் எடுத்தார். ஒன்பதாவது ஓவரில் தோனி அவுட் ஆனதும் சென்னை வெற்றி பெறாதுன்னு நிறைய பேர் நினைத்தார்கள், ஆனால் பிராவோ நினைத்தது வேறு. கடைசி நேரத்தில் 18 பந்தில் 47 ரன்கள் எடுக்க வேண்டும். 18வது 19வது ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து 30 பந்தில் 68 ரன்கள் எடுத்து வெற்றியின் வாசல் வரை அழைத்து வந்து விட்டுவிட்டு அவுட் ஆகிவிட்டார்.  6 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் ஒரு விக்கெட் மீதம் உள்ளது, ரிடையர் ஹார்ட் ஆன கெதர் யாதவ் காலில் ஏற்பட்ட  வலியுடன் ஒற்றை காலில் ஆடி ஜெயித்து கொடுத்துள்ளார்.
 

திரும்பி வந்துட்டோம்னு அடிச்சு சொல்லிருக்காங்க நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். ரெய்னா, தோனினு எல்லாரும் பார்ம்க்கு  வந்துட்டாங்கன்னா வெற்றியைத் தடுக்க முடியாது , அடுத்தடுத்த போட்டிகளில் பார்ப்போம்.