ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தோனியின் ஆட்டம் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தாக்கூர் ரன் அவுட் ஆனார். ஒரு ரன்னில் வெற்றிவாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கள் குவித்தார். இதில்7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் தோனி ஒவ்வொரு பவுண்டரிகளை அடிக்கும் போது அங்கிருந்த கோலியின் முகத்தில் பதட்டம் அதிகரித்தபடியே இருந்ததை காண முடிந்தது.
இதனை தொடர்ந்து பெங்களூரு அணி வெற்றி பெற்ற பிறகு கோலி பேசிய போது, "போட்டி மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாக தான் பந்து வீசினோம். எம்.எஸ்.தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் " எனத் தெரிவித்தார்.