ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களின் ஒருவரும், பிரிட்டானியா பிஸ்கேட், பாம்பே டையிங் நிறுவனங்களின் உரிமையாளருமான நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறையை கொண்டாட ஜப்பான் சென்ற வாடியா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 25 கிராம் போதைப்பொருளை தந்து பாக்கெட்டுக்குள் மறைத்து அவர் எடுத்து சென்றுள்ளார். இது மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதனை தனது சொந்த தேவைக்காகவே எடுத்து வந்துள்ளேன் வேறு எந்த நோக்கமும் இல்லை என அவர் அந்நாட்டு காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இதனை ஏற்காத அவர்கள் வாடியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டானியா பிஸ்கேட், பாம்பே டையிங், கோ ஏர் விமான நிறுவனம், பஞ்சாப் அணி என கிட்டத்தட்ட 13 பில்லியன் டாலர்கள் சொத்து உடைய மிகப்பெரிய தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.