ப்ளே ஆஃப் சுற்றை நோக்கிய லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கின்றன. ஒருவழியாக ஐ.பி.எல். தொடரின் 50ஆவது ஆட்டத்தையும் நெருங்கிவிட்டோம். இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணிக்கு இதுதான் சொந்த மைதானத்தில்
ஆடுவதற்கான ஒரே வாய்ப்பு.
இந்த இரண்டு அணிகளுமே மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலின் நான்காவது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை மும்பை அணி வெற்றிபெற்றால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் தகுதியை இழக்கநேரிடும். அதேபோல், பஞ்சாப் இன்று வெற்றிபெற்றால் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் நடையைக் கட்டவேண்டியதுதான். இப்படி உள்ளே வெளியே ஆடாமல் கொல்கத்தாவுடன் ஜெயித்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது ராஜஸ்தான் அணிக்கு.
ஆனால், மும்பை அணிக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. இதே ரன்ரேட் அல்லது கூடுதலான ரன்ரேட்டுடன் வெற்றிபெற்றால் அந்த அணி நிச்சயமாக புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெறும். இன்றைய போட்டியைப் பொருத்தவரை இரண்டு அணிகளுமே சமமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தக் கூடியவை. நேருக்கு நேர் மோதிய 22 போட்டிகளில் 11ல் மும்பை அணி வெற்றிபெற்றிருக்கிறது. அதேசமயம், வான்கடே மைதானத்தில் களமிறங்கிய 7 போட்டிகளில் பஞ்சாப் அணி நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.