ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இண்டியன்ஸ் அணி.
துபாயில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ் அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 65, ரிஷப் பந்த் 56, ஷிகர் தவான் 15 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 68, இஷான் கிஷன் 33, டி.காக் 20, சூர்ய குமார் 19 ரன்கள் எடுத்தனர்.
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரூபாய் 10 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூபாய் 6.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஐ.பி.எல்.லில் சென்னையை போல அடுத்தடுத்த ஆண்டுகளில் (2019,2020) கோப்பையை தட்டிச் சென்றது மும்பை இண்டியன்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்ச் தொப்பி விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பி ரபாடாவுக்கு வழங்கப்பட்டது.
வளர்ந்து வரும் வீரருக்கான விருது பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது. சிறந்த மதிப்புமிக்க வீரர் மற்றும் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் பந்து வீச்சாளர் விருது ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது.