ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்.
அபுதாபியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 13.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக படிக்கல் 25, குர்கீரத் சிங் 21, விராட்கோலி 18 ரன்கள் எடுத்தனர்.
இதனிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 2 மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்தார். 4 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், பெங்களூரு அணி வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கிறிஸ்மோரிசும் தலா ஒரு மெய்டன் ஓவர் வீசினர்.
துபாயில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.