துபாய் மண்ணில் தங்களுக்குள்ள அனுபவத்துடன் இந்திய அணியை எதிர்கொள்வோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது. துபாயில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன. குறிப்பாக நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் அதன் கடும் போட்டியாளரான பாகிஸ்தான் ஆகிய அணிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி மோதுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்த இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பேசியுள்ளார். ‘பாகிஸ்தான் அணி துபாய் மண்ணில் ஏராளமான போட்டிகளை விளையாடியுள்ளது. அதனால், எங்களுக்கு இங்கிருக்கும் அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்திய அணியை எதிர்கொள்ளும். ஆசியக் கோப்பை போட்டியில் எங்களுக்கே அதிக பலம் இருக்கிறது. இருந்தபோதிலும், இந்தியா மாதிரியான வலுவான அணியை எதிர்கொள்ள அதுமட்டும் போதாது. நாங்கள் முழு பயிற்சியுடன் தயாராக வருவோம். இதற்காக எங்கள் அணி வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்தி வருகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இலங்கை வீரர்களின் பேருந்து மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலிருந்து அங்கு சர்வதேச போட்டிகள் நடப்பதில்லை. இதனால், துபாய் கிரிக்கெட் மைதானம் பாகிஸ்தானின் சொந்த மைதானம்போல் ஆகிவிட்டது.