உலகக் கோப்பை 2023 இல் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முறையே அடுத்த மூன்று இடங்களைக் கைப்பற்றின. இதை அடுத்து இந்திய அணி நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த உலகக்கோப்பை தவிர்த்து, இதுவரை இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிக்கு 7 முறை தகுதி பெற்றுள்ளது, அதன் வரலாறு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1983 உலகக் கோப்பை அரையிறுதி :
முதல்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் ஒருவர் கூட அரை சதம் அடிக்காமல் இந்திய பவுலர்கள் ஆட்டம் இழக்க செய்து சிறப்பான முறையில் பந்து வீசினர். 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் மொஹிந்தர் அமர்நாத், யாஷ்பால் சர்மா, சந்திப் பாட்டில் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அரையிறுதியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
1987 உலகக்கோப்பை அரை இறுதி :
இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இம்முறையும் இங்கிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரகாம் கூச் சதம் அடிக்க, மைக் கெட்டிங் அரை சதம் அடித்து அணி நல்ல ஸ்கோர் பெற உதவினர். பின்னர் ஆடிய இந்திய அணி 45.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
1996 உலகக்கோப்பை அரை இறுதி :
1992ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை இந்திய அணி லீக் போட்டிகளோடு வெளியேறிய நிலையில் 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டரை இந்திய பந்து வீச்சாளர்கள் எளிதில் அவுட் ஆக்கினாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 34.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. கொல்கத்தாவில் நடந்த இப்போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால், ரசிகர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது வாட்டர் பாட்டில்களை வீசி ரகளை செய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2003 உலக கோப்பை அரை இறுதி :
1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிய இந்திய அணி 2003 ஆம் ஆண்டு ஒரு வலிமையான அணியாக உலகக்கோப்பைக்குள் நுழைந்தது. இன்று வரை கூட உலகக் கோப்பையின் சிறந்த அணியாக 2003 உலக கோப்பை அணியே கருதப்படுகிறது. இந்த முறை இந்திய அணி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் மட்டும் தோற்று மற்ற அனைத்து அணிகளிடமும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியிலும் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று அரை இறுதியில் கென்யாவை எதிர்கொண்டது. இந்த அரையிறுதியில் இந்திய அணியின் கேப்டன் கங்குலியின் சதம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் 83 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 270 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கென்ய அணி 46.2 அவர்களின் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கென்யா அணியுடன், கென்யா நாட்டில் நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி விளையாட மறுத்தது. இதனால் அந்த புள்ளிகள் கென்ய அணிக்கு வழங்கப்பட்டது மற்றும் கென்ய அணி காலிறுதியில் இலங்கை அணியை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2011 உலகக்கோப்பை அரை இறுதி :
2007 இல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பையில் லீக் சுற்றில் மோசமான தோல்விகளை பெற்று வெளியேறிய இந்திய அணி 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இந்த முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கரின் 85 ரன்கள் மற்றும் சேவாக்கின் 38 ரன்களும், சுரேஷ் ரெய்னாவின் 36 ரன்களும் கை கொடுக்க இந்திய அணி ஓரளவு கௌரவமான ஸ்கோரை எட்டியது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 49.5 அவர்களின் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வென்று இரண்டாவது முறையாக 28 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
2015 உலகக் கோப்பை அரை இறுதி :
2015 இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் வலிமை வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும் ஃபின்ச் 81 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியா அணி 300 ரன்கள் கடக்க உதவினர். 329 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியதால் இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
2019 உலகக்கோப்பை அரை இறுதி :
இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத உலகக் கோப்பையாக இது அமைந்தது. இந்திய அணிக்கு 28 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை பெற்றுத்தந்த தோனிக்கு உலகக்கோப்பை பெற்று தர வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய அணி அரை இறுதியோடு வெளியேறியது.
அரையிறுதியில் இந்த முறை எதிர்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணியையே எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுலும், ரோஹித் சர்மாவும் 1 ரன்னில் ஆட்டம் இழக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரும் சொதப்பிய நிலையில், ரவீந்திர ஜடேஜாவும், தோனியும் இணைந்து அணியை வெற்றியின் விளிம்பு வரை இழுத்துச் சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி கட்டத்தில் நிகழ்ந்த அந்த தோனியின் ரன் அவுட் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவில் கல்லைத் தூக்கிப் போட்டது.
2023 உலகக் கோப்பை அரை இறுதி :
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி 7 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது எட்டாவது முறையாக உலகக்கோப்பை அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் ஒருநாள் அணியில் செய்யப்பட்ட பரீட்சார்த்த மாற்றங்கள், புதுப்புது வீரர்கள் என ஒரு நிலையான அணியை பெறாமல், எப்படி உலகக் கோப்பை எதிர்கொள்ளப் போகிறது என்ற பயத்தில் இருந்த இந்திய அணி ரசிகர்களுக்கு, இந்திய அணி தனது தொடர் வெற்றிகளின் மூலம் சிறப்பான ஒரு உலகக்கோப்பை அனுபவத்தை இந்த முறை தந்துள்ளது. தொடர் வெற்றிகளின் மூலம் வீழ்த்த முடியாத அணியாக இந்த முறை அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. ஆனால், அரையிறுதியில் கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் எதிர்கொண்ட நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இதுவரை இந்திய அணி 3 முறை அரை இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.
4 முறை அரை இறுதியில் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளது. எனவே வெற்றியை விட தோல்வியையே அதிகம் சந்தித்துள்ளதால், இந்திய அணி ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர். இருப்பினும் இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்லும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உலகத்தின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி இம்முறை பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முக்கியமாக பந்து வீச்சில் பேட்டிங்கை காட்டிலும் சிறப்பான அணியாக திகழ்கிறது. அத்துடன் சொந்த நாட்டின் அணி என்பதால், இந்திய அணிக்கு அது சாதகமாக உள்ளது. மேலும் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மைதானம் வான்கடே என்பதால், அதேபோன்று இந்த முறையும் அரையிறுதியில் நியூஸிலாந்தை வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கூடுதல் சுவாரசியமாக கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியும், ஆஸ்திரேலிய அணியும் 1999 உலகக் கோப்பை அரையிறுதியில் மோதிய போது, ஆலன் டொனால்டின் ரன் அவுட் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பை பறித்தது. அதே போல இந்திய அணிக்கும் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் வெற்றி வாய்ப்பை பறித்தது. இதனால் இரு அணிகளும் அந்த ரன் அவுட் தோல்விக்கு பதிலடி தர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வெ.அருண்குமார்