உலகக் கோப்பையின் 33 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித்தின் சொந்த ஊர் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அவர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அதிக பட்சம் இந்த மைதானத்தில் ரோஹித் 20 ரன்களே எடுத்து உள்ளார். இந்த போட்டியில் அதை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர் கதையாகி உள்ளது. அடுத்து வந்த கோலி, கில்லுடன் இணைந்து பொறுப்பாக ஆடினார். இருவரும் ஒன்று, இரண்டு என ரொட்டேட் செய்தாலும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட தவறவில்லை. சதமடிப்பார் கில் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் 92 பந்துகளில் மதுஷங்கா பாலில் அவுட் ஆனார்.
அடுத்து கோலியாவது சதமடிப்பாரா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரையும் மதுஷங்கா 88 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இணைந்த ராகுல், ஷ்ரேயாஸ் இணை நிதானமாகத் தொடங்கியது. ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யா மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 ரன்களுக்கு வீழ்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், ஷ்ரேயாஸ் தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். இலங்கை பந்து வீச்சை சிக்ஸருக்கு விரட்டிய வண்ணம் இருந்தார். 6 சிக்ஸர்கள் அடித்து சதத்தை நெருங்கும் நேரத்தில் திரும்பவும் மதுஷங்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். ஷ்ரேயாஸ் 82 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவின் கடைசிக் கட்ட அதிரடியான 35 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், சமீரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்க உள்ளது.
- வெ.அருண்குமார்