கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னணி வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்றுவரும் இரண்டாம் நாள் ஏலத்தில் ரூ. 4 கோடிக்கு சிவம் தூபேவை ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி.
மற்ற அணிகளைப் பொறுத்தவரை, ஐடன் மார்க்ரமை ரூ.2.6 கோடிக்கும், மார்கோ ஜான்சனை ரூ.4.2 கோடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அதேபோல, கலீல் அகமதை 5.25 கோடிக்கும் மந்தீப் சிங்கை ரூ 1.10 கோடிக்கும் சேதன் சகாரியாவை ரூ.4.2 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ. 11.50 கோடிக்கும், ஒடியன் ஸ்மித்தை ரூ. 6 கோடிக்கும் வாங்கியது. மேலும், ஐபிஎல் தொடருக்குப் புதிதாக வந்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.1.50 கோடிக்கு டொமினிக் டிரெக்ஸ்ஸையும் ரூ.2.6 கோடிக்கு விஜய் சங்கரையும் வாங்கியது. நவ்தீப் சைனி 2.60 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அஜின்கியா ரகானே, ரூ 1 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸால் ஏலம் எடுக்கப்பட்டார். இன்றைய ஏலத்தில் இயோன் மோர்கன், ஆரோன் பின்ச், லுங்கி இங்கிடி, புஜாரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் யாராலும் ஏலம் எடுக்கப்படாமல் போனது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.