Skip to main content

‘வெற்றி to தோல்வி’ ட்ரெண்டை மாற்றுமா சென்னை? - ஐ.பி.எல். போட்டி #52

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 

csk

 

ப்ளே ஆஃப் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கான வாய்ப்பே இல்லாத ஒரே அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி இருக்கிறது. இனி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய வலுவான அணிகளுடன் மோத இருக்கிறது. எனவே, இதுவரை ஒரு குழுவாக சேர்ந்து எதிரணியைக் கிறங்கடிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தாத டெல்லி அணிக்கு, அந்தக் குறையை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

சென்னை அணியைப் பொருத்தவரை ப்ளே ஆஃப் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், முதல் இரண்டு இடங்களில் நீடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐ.பி.எல். ஃபிக்ஸர்களின் படி முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிக்கு இரண்டாவது குவாலிஃபையர் சுற்றில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தொடரின் தொடக்கத்தில் இருந்த ஆக்ரோஷ அணியாக இல்லாமல், சென்னை அணி கடந்த ஏப்ரல் 25ஆம் தேதிக்கு மேல் அதை வெளிப்படுத்தவில்லை. அதன்பிறகு களமிறங்கிய ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மாறிமாறி முடிவை எட்டியிருக்கிறது அந்த அணி. தொடர்கதையாகி இருக்கும் அந்த ட்ரெண்டை மாற்றவேண்டும். ஐதராபாத் அணியுடனான கடைசி வெற்றியின் வேகத்தை இன்றைய போட்டியிலும் காட்டவேண்டும். 

 

delhi

 

இந்த இரண்டு அணிகளும் மோதிய கடைசி 17 போட்டிகளில் சென்னை அணி 12 முறை வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல், ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் களமிறங்கிய ஐந்து போட்டிகளில் சென்னை அணி ஒருமுறை மட்டுமே தோற்றிருக்கிறது. எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.