Skip to main content

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மோசமான சாதனை... தடுமாறும் சென்னை அணி... காரணம் என்ன?

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

csk players

 

 

2014-ம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி தொடர்ச்சியான மூன்று தோல்விகளை சந்தித்து அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது.

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இத்தொடரின் தொடக்கம் பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றியும், மூன்று தோல்விகளும் கண்டுள்ளது. ஐ.பி.எல் தொடருக்காக அமீரகம் சென்றதிலிருந்தே சென்னை அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டன. முதலில் ஒரு பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை அணி வீரர்களால் திட்டமிட்டபடி பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அதன்பின், சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா, சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மற்றொரு மூத்த வீரரான ஹர்பஜன் சிங்கும், இதே காரணத்தின் பெயரில் விலகினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

 

பல பின்னடைவுகள் இருந்தாலும், தொடர் தொடங்கியவுடன் உற்சாகமாக பங்கெடுத்த சென்னை அணி, முதல் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக அதிரடியான வெற்றியைப் பெற்றது. இது தந்த உற்சாகம் அடங்குவதற்குள், சென்னை அணியின் மற்றொரு வீரரான அம்பதி ராயுடு காயமடைந்தார். சென்னை அணியின் கேப்டனான தோனியின் சர்வதேச ஓய்விற்குப் பின் நடக்கும் முதல் தொடர் என்பதால் அவர் மீது ஏற்பட்டுள்ள கூடுதல் எதிர்பார்ப்பு, களத்தில் அவரைத் தடுமாற வைத்துள்ளது. மேலும், சென்னை அணியின் எந்த ஒரு வீரரும் கடந்த நான்கு போட்டியிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது, சென்னை அணிக்கு கூடுதல் தலைவலியாக உள்ளது. வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில், சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி இதேபோல தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தொடரின் தொடக்கத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பது அவ்வணி ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் சறுக்கலை சந்தித்த சென்னை அணி, அதன்பின்பு எழுச்சி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதில், பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்து மூன்றாம் இடம் பிடித்தது.

 

அதேபோல, இந்தாண்டும் சென்னை அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.