இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிகளும் மோதிவருகின்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய ஆடவர் அணி 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு நாட்டு மகளிர் அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற ஒருநாள்போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 45 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 162 ரன்கள் வெற்றி இலக்கு என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மந்தனாவும் கேப்டன் மிதாலி ராஜும் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். 35 ஓவர்களில் 166 ரன்களை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஸ்மிரிதி மந்தனா 90 ரன்களும், இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 63 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.