பிலிப்பைன்ஸில் நடந்த பெண்களுக்கான ஆசிய டிவிஷன் 1 ரக்பி தொடரின் மூலம் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி தனது முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவிற்கான இந்த பெண்களுக்கான ரக்பி அணி அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், இந்திய அணி இந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே தனது முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
அதுவும் தனது முதல் வெற்றியை வலுவான சிங்கப்பூர் அணிக்கு எதிராக பதிவு செய்தது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்தியாவின் இந்த இளம் அணி, சிங்கப்பூரை 21-19 என்ற புள்ளி கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்திய மகளிர் ரக்பி அணியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ரக்பி உலகக்கோப்பை தேர்வுக்கு மிக முக்கியமான இந்த ஆசிய டிவிஷன் 1 தொடரில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.