இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கியா சூப்பர் லீக் எனும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தானா வெஸ்டெர்ன் ஸ்டோர்ம்ஸ் அணிக்காகவும், ஹர்மான்பிரீத் கவுர் லங்காஷிர் அணிக்காகவும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருவருக்கும் இது இங்கிலாந்து கவுண்டியின் அறிமுக தொடர் என்பதாலும், இந்தியாவில் அசத்தலாக செயல்படுவதாலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதை இருவருமே பூர்த்தி செய்யும் விதமாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். லோஃப்பரோ ஸ்டோர்ம் அணிக்கெதிரான போட்டியில் ஸ்மிரிதி மந்தானா வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டெவினின் சாதனையை சமன்செய்தார்.
இந்நிலையில், ஸர்ரே ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஹர்மான்பிரீத் கவுர், அதிரடியாக விளையாடி லங்காஷிர் அணியை வெற்றிபெறச் செய்தார். 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லங்காஷிர் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் 11 ரன் எடுக்கவேண்டும் என்றிருந்தபோது, ஹர்மான்பிரீத் கவுர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனை, இங்கிலாந்து கிரிக்கெட் அசோஷியேஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.