தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் 4 வயது சிறுமி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி சான்வி அகர்வால். சென்ற ஆண்டு முதல் செஸ் விளையாடத் தொடங்கிய சிறுமி சான்வி, அவரது பெற்றோரின் ஊக்கத்தால் அடுத்தடுத்த கட்டங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். கணினி மூலம் செஸ் விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்த சான்வியின் பெற்றோர், கணினியில் இருக்கும் செஸ் விளையாட்டின் பல்வேறு படிநிலைகளை சுலபமாக வெற்றிகொள்வதைக் கண்டு வியந்துள்ளனர். அப்படியே விடாமல் தொடர்ந்து அவரை பயிற்சியாளரிடம் அனுப்பியதன் விளைவாக, தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் சான்வி சாதனை படைக்கிறார்.
இந்நிலையில், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட 32-ஆவது தேசிய பெண்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழு வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சான்வி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து பேசும் சான்வியின் பயிற்சியாளர் நிதின் ரத்தோர், செஸ் விளையாட்டில் அட்டாக்கிங் முவ் எடுப்பதுதான் முக்கியமானது. அது சான்விக்கு சர்வசாதாரணமாக வருகிறது. இதே வேகத்தில் சென்றால் ஆசிய, உலக சாம்பியன் பட்டங்களையும் அவரால் வெல்லமுடியும் என்கிறார்.