Skip to main content

ரெய்னா என் மனைவியின் உயிரைக் காப்பாற்றினார்! - மனம்திறக்கும் பஸ் ஓட்டுநர் 

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
jeff

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டி20 தொடரில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றியும், ஒருநாள் தொடரில் 1 - 2 என்ற கணக்கில் தோல்வியும் அடைந்தது. இன்னும் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரிலும் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த தொடரின் மத்தியில், பிசிசிஐ ஒரு சுவாரஸ்யமான வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
 

அதில், இந்திய அணிக்காக இங்கிலாந்தில் பஸ் டிரைவராக இருக்கும் ஜெஃப் குட்வின், இந்திய அணியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். 1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் இந்திய அணியை அழைத்துச்செல்லும் பேருந்தின் டிரைவராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜெஃப் குட்வின், இந்திய அணியுடன் மனதளவில் நெருங்கிய பிணைப்புடன் இருப்பதாகவும், அவர்களைப் போல ஒரு ஒழுக்கமான அணியைப் பார்த்ததில்லை எனவும் தெரிவித்தார். 
 

மேலும், தனது காதல் மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தபோது, அதைக் குணப்படுத்த தன்னிடம் போதுமான பணம் இல்லாமல் இருந்தது. அதைத் தன்னிடம் கேட்டறிந்த ரெய்னா, உடனடியாக லீட்ஸ் நகரில் ஏல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தன்னுடைய ஆடைகளை ஏலத்தில் விற்றார். அதில் வந்த கணிசமான பணம் முழுவதையும் தனது மனைவியின் சிகிச்சைக்காக தந்ததால், இன்று அவர் பூரண குணமடைந்து தன்னுடன் மகிழ்ச்சியாக வசித்து வருவதாக உருக்கமாக தெரிவித்தார் ஜெஃப். 
 

 

 

மேலும், இந்திய அணியின் கேப்டன் தனக்கு அருகேயுள்ள முன்பக்க இருக்கையில்தான் அமர்வார் என்றும், சகால் தன்னை எப்போதும் ஓல்டுமேன் என்றுதான் அழைப்பார் என்றும் ஜெஃப் குட்வின் தெரிவித்துள்ளார்.